தலை தூக்கும் சர்வாதிகாரம் அழிவின் விளிம்பில் ஜனநாயகம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயற்குழுவில் குற்றச்சாட்டு. - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 6 November 2022

தலை தூக்கும் சர்வாதிகாரம் அழிவின் விளிம்பில் ஜனநாயகம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயற்குழுவில் குற்றச்சாட்டு.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயற்குழு  திருச்சி எஸ்.எஸ். மஹாலில் மாநிலத்தலைவர் M.S.சுலைமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாநிலப் பொதுச்செயலாளர் அப்துல் கரீம் MISC அவர்களும், மாநிலப்பொருளாளர் இப்ராஹிம் ஆகியோரும், மேலும் பிற மாநில நிர்வாகிகள், மாநில மேலாண்மை மற்றும்  தணிக்கை குழு நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.


1. கோவையில் கார் வெடிவிபத்து.

கோவையில் கார் சிலிண்டர் வெடி விபத்து நடந்தது. இந்த சம்பவத்தை ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயமும் கண்டித்து இவ்வன்முறைக்கு எதிராக அனைவரும் ஒருமித்த குரல் எழுப்பிய நேரத்தில் பாசிச சிந்தனை கொண்டவர்கள் இதன்மூலம் மதவாத அரசியல் செய்ய திட்டமிட்டு காவல்துறைக்கு பல நெருக்கடிகளை ஏற்படுத்தினர். பதட்டத்தை ஏற்படுத்த பந்த் அறிவித்தனர். 


பாசிச சக்திகளின் சதி வேலைகள் தமிழகத்தில் எடுபடாது என்பதையும் அதை முறியடிக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்ளும் என்பதையும் இச்செயற்குழு வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்.


2. பொது சிவில் சட்டம்.

ஆளும் ஒன்றிய அரசு சிறுபான்மை சமுதாய மக்களை ஒடுக்குவதற்காக பொது சிவில் சட்டம் கொண்டுவர முயற்சி செய்கிறது. வழிகாட்டு நெறி முறைகளில் பூரண மது விலக்கு கொண்டு வர வழிகாட்டபட்டுள்ளது. மக்கள் உயிரை குடிக்கும் பூரண மது விலக்கு நடைமுறை படுத்த எந்த சட்டமும் இதுவரை கொண்டு வரப்படவில்லை. 


ஆனால் வழிகாட்டு நெறிமுறையில் உள்ளதாக சொல்லி இஸ்லாமிய சமுதாயத்தை குறிவைத்து பொது சிவில் சட்டத்தை கொண்டுவர முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது. முஸ்லிம்களின் உரிமையை பறிக்கும் வகையில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்தால்  ஜனநாயக வழியில் கடுமையான போராட்டங்கள் நடத்தப்படும் என்பதை இச்செயற்குழு வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்.


3. மக்கள் உயிரை பலி வாங்கவா குஜராத் மாடல்.

குஜராத்தில் 145 க்கும் மேற்பட்டோர் இறந்து போனதை அமைதியாக ஊடகங்கள் கடந்து செல்கின்றன, ஆய்வு செய்யாமல், பணிகள் முழுமை அடையாமல், தேர்தலை கருத்தில் வைத்து வேகமாக குஜராத்தில் உள்ள தொங்கு பாலத்தை திறந்துள்ளனர். 


பாதிக்கபட்டவர்களை பார்வை இடுவதிலும் இவர்களின் போட்டோஷாப் அரசியல் வெளிப்பட்டுள்ளது. மனித உயிர்கள் இவர்களுக்கு மலிவாகி விட்டதா? இச்சம்பவத்தை முழுமையாக விசாரித்து குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் அப்பொழுதுதான் இதுபோன்று மனித உயிர்களில் விளையாட கூடியவர்களுக்கு அச்சம் ஏற்படும் என இச்செயற்குழு வாயிலாக சொல்லிக் கொள்கிறோம்.


4. தலை தூக்கும் சர்வாதிகாரம் அழிவின் விளிம்பில் ஜனநாயகம்.

இந்திய நாட்டில் சிறுபான்மை சமூகம் பாசிச சக்திகளால் அடக்குமுறைக்கு உள்ளாகி வருகிறது. பசுவின் பெயரால், மதத்தின் பெயரால் முஸ்லிம்கள் கொல்லபடுகின்றனர். பலர் சிறைச்சாலைகளில் தள்ள படுகின்றனர். மாணவர்கள் மீது கூட கடுமையான வழக்குகள் பதியப்படுகின்றன. முஸ்லிம் பெண்கள் அப்ளிகேஷன் மூலமாக மானபங்கம் செய்யப்படுகின்றனர்.


ஹிஜாப் அனிய தடை, ஹலால் இறைச்சி தடை, ஒலி பெருக்கியில் பாங்கு சொல்ல தடை, போராட்டம் நடத்தினால் புல்டோசர் மூலம் வீடுகளை இடிப்பது,  என்று சொல்லில் அடங்காத துயரங்களை சுமந்து கொண்டு முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகிறோம். 


முத்தலாக தடை சட்டம். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 பிரிவை  ஐ நீக்கியது. NIA விற்கு சிறப்பு அதிகாரங்கள்,  பொது சிவில் சட்ட முன்னெடுப்புகள் என்று முஸ்லிம்களை ஒடுக்கும் அனைத்து விஷயங்களையும்  பாசிச பாஜக அரசு செய்து வருகிறது. சர்வாதிகாரம் வளர்ந்து வருகிறது, ஜனநாயகம் படுகுழியில் தள்ளப்படுகிறது, மதச்சார்பற்ற இந்தியாவின் சுதந்திரத்திற்காக வெள்ளையரை எதிர்த்து முஸ்லிம்கள் நடத்திய நீண்ட நெடிய போராட்டத்தை ஆளும் ஒன்றிய அரசிற்கு இச்செயற்குழு  வாயிலாக நினைவு படுத்துகிறோம்.


முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அவர்களுடைய உரிமைகள் பாதுக்காக்க பட வேண்டும் என்று இம்மாநில செயற்குழு வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.


5. கூட்டு பாலியல் பலாத்காரம்.

குஜராத்தில் 3000 முஸ்லிம்கள் கொன்று குவிக்கபட்ட இன அழிப்பு கலவரத்தின் போது நடைபெற்ற நெஞ்சை உலுக்கும் சம்பவம் தான் பல்கீஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரம். 


இதயத்தை நடு நடுங்கச் செய்யும் வகையில் நான்கு வயதுக் பெண் குழந்தையை பாறையில் அடித்து கொன்று, ஏழு பேர்களை படுகொலை செய்து,  பல்கீஸ் பானுவை கொடூரமாகக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர். இதை செய்த காட்டு மிராண்டிகள் 11 பேர்  விடுதலை செய்யபட்டுள்ளனர்.


பல போராட்டங்களுக்கு பிறகு பெறப்பட்ட நீதி  குழி தோண்டி புதைக்கப்பட்டிருக்கிறது, சிறையில் வாழ்வதற்கே தகுதியற்றவர்களும், மரண தண்டனைக்குரியவர்களுமான இந்த மனித மிருகங்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பது இந்திய தேசத்திற்கே அவமானகரமான செயலாகும்.  


மரண தண்டனை அளிக்க பட்டால் தான் இனி இது போன்ற ஈனச் செயல்களில் ஈடுபட மற்றவர்கள் பயப்படுவார்கள். இது போன்ற மனித மிருகங்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும்  என்று இம்மாநில செயற்குழு வாயிலாக கேட்டுக் கொள்கிறோம். 


6. பித்அத் ஒழிப்பு மாநாடு.

இன்ஷா அல்லாஹ் 2023 பிப்ரவரி 5 ம் தேதி பித்அத் ஒழிப்பு மாநாடு  நடைபெற உள்ளது. இறைத்தூதரின் போதனைகளை முஸ்லிம்கள் புறக்கணித்து வாழ்ந்து வருகின்றனர்.


முஸ்லிம்களிடம் மண்டிக் கிடக்கும் அனாச்சாரங்களையும், மார்க்கத்தின் பெயரால் உருவாக்கபட்ட புதுமைகளையும் முழுமையாக கலைந்திட நம்முடைய பிரச்சாரக் களத்தை வீரியப்படுத்த வேண்டும். இந்த மாநாட்டை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் பட்டி தொட்டி எங்கும் இந்த பிரச்சாரத்தை  வீரியமாக கொண்டு செல்ல இம்மாநில செயற்குழு வாயிலாக உறுதி ஏற்போம்.


7. தமிழகத்தில் இடஒதுக்கீடு.

தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 தனி இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தருவேன் என்று ஜெயலலிதா வாக்களித்தார்.  அவர் வாழும் காலம் வரை அதற்கான எந்த முன்னெடுப்பையும் அவர் செய்யவில்லை. அவரின் மறைவிற்கு பிறகு அதிமுகவினர் பாஜகவின் அடிமைகளாக மாறி விட்டனர்.


சிறுபான்மையினரான முஸ்லிம்களின்  இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே தமிழக அரசு நிறைவேற்றாமல் இருந்து வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மை சமுதாயத்தின் மொத்த வாக்குகளையும் பெற்று ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் மு..க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 3.5% இடஒதுக்கீட்டை 7% ஆக அதிகரித்து முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டும் என்று இம்மாநில செயற்குழு வாயிலாக தெரிவித்து கொள்கிறோம்.


8.  வெள்ளை அறிக்கை.

இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது இன்று வரை முழுமையாக பல துறைகளில் கொடுக்கப்படவில்லை.  சுதந்திரத்திற்கு முன்னர் இஸ்லாமியர்களுக்கென்று தனி இட ஒதுக்கீடு சென்னை மாகாணத்தில் இருந்து வந்த நிலை மாறி இன்று தங்கள் சதவீதத்திற்கும் மிகக்குறைவாகவே ஒவ்வொரு அரசுத்துறையிலும், அதிகாரத்திலும் இஸ்லாமியர்கள் உள்ளனர்.

கல்வி , வேலைவாய்ப்பு, உள்ளாட்சி அமைப்புகள் என ஒவ்வொன்றிலும் இஸ்லாமியர்கள் பெற்றுள்ள இடம் என்ன என்பதை அறியும் வகையில் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று இம்மாநில செயற்குழு வாயிலாக தெரிவித்து கொள்கிறோம்.


9.  சி.ஏ.ஏ

இந்திய நாட்டை உருவாக்குவதற்கும் , இந்திய  நாடு சுதந்திரம் பெறுவதற்கும் இஸ்லாமியர்கள் ஆற்றிய பங்கு மகத்தானது. அத்தகைய இஸ்லாமியர்களை நாட்டை விட்டு அந்நியப்படுத்தும் தீய நோக்கில் ஒன்றிய பாசிச பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டுவந்தது. 


இதை இந்தியர்கள் யாருமே ஏற்கவில்லை. ஆளும் ஒன்றிய பாசிச பாஜக அரசு இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு முயன்றால் இச்சட்டத்திற்கு எதிராக தேசம் தழுவிய பலகட்ட போராட்டங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்னின்று நடத்தும் என்பதை இம்மாநில செயற்குழு வாயிலாக தெரிவித்து கொள்கிறோம். போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில செயலாளர் யூசுப் அவர்களின் நன்றியுரையுடன் மாநில செயற்குழு நிறைவுற்றது. 

No comments:

Post a Comment

Post Top Ad