30-ம் தேதி ரயில் மறியல்: வைகோ அறிவிப்பு. - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 29 January 2023

30-ம் தேதி ரயில் மறியல்: வைகோ அறிவிப்பு.

வருகின்ற ஜனவரி 30ஆம் தேதியன்று மணப்பாறையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் ரயில் மறியலில் ஈடுபட உள்ளதாக வைகோ அறிவித்துள்ளார். தனது அறிவிப்பில் வைகோ கூறியுள்ளதாவது, தமிழகத்தின் மையப்பகுதியில் உள்ள திருச்சி மாவட்டத்தில் அடுத்ததாக உள்ள பெரிய நகரம் மணப்பாறை. இந்நகரில் இருந்து கல்வி - வேலை வாய்ப்புகளுக்காக சென்னை மற்றும் மதுரை உட்பட பெரு நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் ரயில் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

மணப்பாறையைச் சுற்றிலும் ஏராளமான சிறு தொழில் முனைவோர் உள்ளனர். புத்தாநத்தம், துவரங்குறிச்சி உள்ளிட்டஊர்களில் இருந்து ஆயத்த ஆடைகள் தயாரித்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதுதவிர, தமிழ் வளர்த்த கருமுத்து தியாகராஜ செட்டியாரால் தொடங்கப் பெற்ற பழமை வாய்ந்த மீனாட்சி நூற்பாலை, மாரீஸ் நூற்பாலை உள்ளிட்ட தனியார் தொழிற்சாலைகளும், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் இரண்டாம் அலகு தொழிற்சாலையும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அண்மையில் தொடங்கப்பெற்ற சிப்காட் தொழிற்பேட்டையும் மணப்பாறையில் உள்ளது. இந்தத் தொழிற்சாலைகளில் ஏறத்தாழ ஐந்தாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 


மணப்பாறை திருச்சியிலிருந்து 45 கிலோமீட்டர் தூரத்திலும், திண்டுக்கல்லில் இருந்து 65 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. திருச்சி,திண்டுக்கல்லுக்கு இடைப்பட்ட 110 கிலோமீட்டருக்கு இடையில் மணப்பாறை ரயில் நிலையம் மட்டுமே உள்ளது. அகல ரயில் பாதை அமைக்கப்படுவதற்கு முன்பு மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று சென்றன.அந்தக் காலகட்டத்தில் காந்தி மதுரை பயணம் மேற்கொண்டபோது, தியாகி முத்து வீராசாமி தலைமையில் மணப்பாறை பொதுமக்கள் வரவேற்பு நல்க, ரயிலில் இருந்து இறங்கி நடைமேடையில் நின்று காந்தி பேசியதும், மொழிப்போர் காலத்தில் மணப்பாறை ரயில் நிலையத்தை மாணவர்கள் அதிகம் பயன்படுத்திய வரலாறும் காலக் கல்வெட்டாக நிலைத்து நிற்கின்றது.


இத்தகைய பெருமைகளுக்கு உரிய நகரான மணப்பாறையில் பொதுமக்களின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகுதான் ஒரு சில துரித ரயில்கள் நின்று செல்கின்றன. திருச்சியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் இண்டர்சிட்டி ரயில் மணப்பாறையில் நிற்க வலியுறுத்தி மதிமுக ஒருங்கிணைத்த அனைத்துக் கட்சிகளின் போராட்டக் குழுவின் சார்பில் 2014-ம் ஆண்டு உண்ணாவிரதம், கடையடைப்பு என பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. 


இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி 30ஆம் நாள் திங்கள்கிழமை மணப்பாறை சட்டமன்றத் தொகுதி மறுமலர்ச்சி திமுக சார்பாக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் தலைமையில், மணப்பாறை நகரச்செயலாளர் எம். கே. முத்துப்பாண்டி, மணப்பாறை ஒன்றியச் செயலாளர்கள் ஆ. துரைராஜ், ப. சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையில் ரயில் மறியல் போராட்டம் மணப்பாறையில் நடைபெற உள்ளது.ஆகவே, மணப்பாறை மக்களின் இந்தக் கோரிக்கையை ஏற்று, மத்திய ரயில்வே நிர்வாகம் மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று செல்வதற்கு உத்தரவிட வேண்டும் என்றுகேட்டுக் கொள்கின்றேன், என்று மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


- திருச்சி மாவட்ட செய்தியாளர் மகேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad