மருங்காபுரி ஜமீன்தாரிணி கி.சு.வி.இலட்சுமி அம்மணி எழுதிய திருக்குறள் தீபாலங்காரம் நூலை நாட்டுடைமையாக்க முயல்வேன் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் உறுதி. - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 17 January 2023

மருங்காபுரி ஜமீன்தாரிணி கி.சு.வி.இலட்சுமி அம்மணி எழுதிய திருக்குறள் தீபாலங்காரம் நூலை நாட்டுடைமையாக்க முயல்வேன் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் உறுதி.


1928-ல் மருங்காபுரி ஜமீன்தாரிணி கி.சு.வி.இலட்சுமி அம்மணி எழுதிய திருக்குறள் தீபாலங்காரம் என்னும் நூலை நாட்டுடைமையாக்கிட தமிழ்நாடு முதல்வரிடம் கோரிக்கை வைப்பேன் என்றார் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் த.இனிகோ இருதயராஜ்.

மணப்பாறை அடுத்துள்ள மருங்காபுரி - முடுக்குப்பட்டி குறளாலயம் வளாகத்தில் பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளையின் சார்பில் 1928-ல் திருக்குறள் தீபாலங்காரம் எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி கி. சு.வி.இலட்சுமி அம்மணி அவர்களின் புகழ் போற்றும் விழா, திருவள்ளுவர் பிறந்த நாள்விழா, தமிழர் திருநாளாம் பொங்கல் பெருவிழா ஆகிய முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை மணப்பாறை சிந்துஜா மருத்துவமனையின் தலைமை நிர்வாக இயக்குநர் டாக்டர் பெ.கலையரசன் தலைமையில் நடந்தது.


இந்த நிகழ்வில் பங்கேற்று சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மேலும் பேசியது. 1928 -ஆம் ஆண்டு மருங்காபுரி ஜமீன்தாரிணி இலட்சுமி அம்மையார் திருக்குறளை நன்கு கற்றுணர்ந்து  அவர்களுடைய அறிவிலும், ஞானத்திலும் எழுந்த கருத்துக்களை யெல்லாம் சிறு சிறு துண்டு சீட்டுகளில் எழுதி சேமித்து வைத்திருந்தார் என்பதை அறிய முடிகிறது.

கல்வி உரிமை என்பது மறுக்கப்பட்டு, அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற கடினமான அந்த காலகட்டத்தில் ஆங்கிலம் மட்டுமே படிக்க முடியும். அதையும் உயர்ஜாதி வகுப்புனர் மட்டுமே படிக்க முடியும் என்ற அந்த சூழ்நிலையில் இலட்சுமி அம்மையார் அவர்கள் 1928ல் 500-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார் என்றால் திருக்குறள் மீது உள்ள பற்றும், பாசத்தையும் அறிந்து கொள்ள முடிகிறது, அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.


இலட்சுமி அம்மையார் அவர்களைப் பற்றி வலைதளங்கள் போன்றவற்றில் ஆய்வு செய்கையில் கிடைத்த அரிய தகவல்கள் என்னவென்று சொன்னால் ஜமீன்தாராக இருப்பவர்கள் செல்வ செழிப்புடன் அனைத்து வசதிகளுடன் வாழுகின்ற அந்த நிலையிலும், தமிழின் மீது உள்ள பற்றினால் இந்த அளவிற்கு சிறப்பாக எழுதியுள்ளார்கள்,


அது மட்டுமில்லாமல் துண்டு சீட்டுகளில் எழுதி வைத்துள்ள கருத்துக்களை புத்தகமாக அச்சிட்டு வெளியிடலாமே என்ற ஆலோசனையின் படி, புத்தகமாக வெளியிட்டது மட்டுமில்லாமல் எல்லோராலும் அறியப்பட்ட தனது சமகாலத்து தமிழாய்ந்த அறிஞர்களான திரு. வி.க, மறைமலை அடிகளார், உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் மட்டுமில்லாமல் , ஒய் எம் சி ஏ அமைப்பின் தலைவராக இருந்த லண்டன் பாப்லே போன்றவர்களும் இந்த புத்தகத்திற்கு அணிந்துரை எழுதியிருக்கிறார்கள் என்ற தகவல்களை எல்லாம் அறியும்போது, தொலைபேசி போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாத அந்தக் காலத்திலேயே அத்தனை தமிழ் சான்றோர்களிடமும் தொடர்பு கொண்டு அவர்களிடம் தான் எழுதிய நூலுக்கு அணிந்துரை வாங்கியிருக்கிறார் என்பதையும் அறிந்து மிகவும் வியப்படைந்தேன்.

அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த புத்தகத்திற்கு "திருக்குறள் தீபாலங்காரம்" என்ற சிறப்பான பெயரையும் சூட்டி வெளியிட்டு இருக்கிறார்கள் என்று சொன்னால் அந்த அளவிற்கு திருக்குறளின் மீது பற்றுள்ளவராய் வாழ்ந்திருக்கிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.


பைபிளுக்கு அடுத்து  140 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டது திருக்குறள் தான். அதனால்தான் தமிழக முதல்வராக சிறப்பாக பணியாற்றிய மாண்புமிகு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், அய்யன் வள்ளுவரின் புகழை பரப்பும் வண்ணம் குமரிக் கடலில் 133 அடி உயரமுள்ள பிரமாண்ட சிலை வைத்ததும் இல்லாமல், திருக்குறளை அனைத்து மக்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக அரசுப் பேருந்துகள் அனைத்திலும் திருக்குறளை எழுதி வைத்தது, உலகப் பொதுமறை என்ற தகுதியையும் பெற்றுத் தந்து பெருமைப்படுத்தினார்கள்.


அதுபோலவே, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் தலைமையில் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல், திருவள்ளுவர் திருநாள் போன்றவைகள் மிகவும் சிறப்பாக அனைத்து மக்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.


அதற்கு முக்கிய காரணம் தமிழ் வளர்ச்சித் துறையால் உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியையும் - தமிழர்களின் பண்பாட்டையும் அனைத்து மக்களிடமும் சிறப்பாக கொண்டு போய் சேர்க்கும் வண்ணம் மாண்புமிகு முதல்வர் அவர்கள் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், அதுபோலவே தொல்லியல் துறையால் கீழடி மற்றும் கங்கை கொண்ட சோழபுரம்  போன்ற பகுதிகளில் தமிழர்களின் தொன்மைக்கான ஆராய்ச்சியை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு முழுமையாக செய்து கொண்டிருக்கிறார்கள்.



அதுமட்டுமில்லாமல் கீழடி போன்ற பகுதிகளுக்கு அடிக்கடி சென்று பார்வையிட்டும் அதைப் பற்றிய விவரங்களை அவ்வப்பொழுது தெரிந்து கொண்டும் அந்தப் பணிகளின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார்கள். இதற்கெல்லாம் மேலாக தமிழ்நாடா தமிழகமா என்ற பிரச்சனையை ஒரு சிலர் ஏற்படுத்திய போது, ஒவ்வொரு தமிழருடைய மனதில் உள்ள எண்ணத்தை வெளிப்படுத்தும் வண்ணம் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முனைந்தவரை எச்சரித்து அனுப்பியதையும் அறிந்திருப்பீர்கள்.


அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நாம் எல்லோரும் தமிழர்கள் தான் என்ற உணர்ச்சி மிகுந்த வகையில் இந்த தமிழர் திருநாளை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.  இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் மணவை தமிழ் மாணிக்கம் அவர்களின் எண்ணத்திற்கேற்ப என்னால் முடிந்த அளவிற்கு இந்த அமைப்பிற்கு உதவி செய்வேன் என்றார்.


முன்னதாக திருவள்ளுவர் மற்றும் மருங்காபுரி ஜமீன்தாரிணி கி.சு.வி.இலட்சுமி அம்மணி படங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அறக்கட்டளையின் நோக்கங்களையும், குறளாலயம் அமைக்கப்படும் காரணங்களையும் விளக்கி அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் மணவை தமிழ்மாணிக்கம் பேசினார். மாநிலக் கலைப்போட்டியில் வென்று கலையரசி விருது பெற்ற அரசுப்பள்ளி மாணவி ராஜ ஹரிணிக்கு திருவள்ளுவர் படம் வழங்கிப் பாராட்டப்பட்டது. அறக்கட்டளையின் பொருளாளர் பாவலர் தாழை ந.இளவழகன் வரவேற்றார். நிகழ்வின் தொடக்கத்தில் மணப்பாறை கரந்தையடி மாணவர்களின் சிலம்பாட்ட நிகழ்வு நடந்தது. 


இந்த நிகழ்வில் மறுமலர்ச்சி திமுக திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி இரா.சோமு, திருச்சி மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் பண்ணப்பட்டி என்.கோவிந்தராசன், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் புஸ்பராஜ், திருக்குறள் பயிற்றக நிறுவனர் திருக்குறள் புலவர் நாவை.சிவம், அறங்காவலர்கள் ஆ.துரைராஜ், இரா.கார்த்திகேயன்,   புரவலர் எம்.ஆர்.பாலுசாமி, ப.சுப்ரமணியன், கவிஞர் மு.மு.அஷ்ரப்அலி, மணவைத் தமிழ் மன்றச்செயலாளர் கவிஞர்  கோ.நவணி சுந்தரராசன், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலவாரிய உறுப்பினர் அரசப்பன், திருச்சி ரோட்டரி சங்க செயலாளர் புஸ்பா சுப்ரமணியன், கிராம நிர்வாக அலுவலர் பாக்யா, நூலகர் பிரபு, கீழவெளியூர் மாணிக்கம், நா.சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad