ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம். - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 18 January 2023

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம்.


திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், இந்திய விலங்குகள் நல வாரிய அமைப்பின் உறுப்பினர் மற்றும் ஜல்லிக் கட்டு கண்காணிப்புக் குழுத் தலைவர் (Nodal Officer) டாக்டர் எஸ்.கே.மிட்டல்  தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப., முன்னிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான ஜல்லிக்கட்டு விழாக்குழுவினருடனான கலந்தாலோசனைக் கூட்டம் இன்று (18.01.2023) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், இந்திய விலங்குகள் நல வாரிய அமைப்பின் உறுப்பினர் மற்றும் ஜல்லிக்கட்டு கண்காணிப்புக் குழுத் தலைவர் (Nodal Officer) டாக்டர் எஸ்.கே.மிட்டல்  தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப., ஆகியோர் தெரிவித்ததாவது:


  1. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு விழா ஏற்பாட்டாளர்கள் போட்டி நடத்துவதற்கு முன்கூட்டியே மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் எனவும், முன் அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தக்கூடாது என விழாக்குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
  2. ஜல்லிக்கட்டு போட்டியானது உரிய அரசாணை வெளியிட்ட பிறகே நடத்தப்பட வேண்டும் எனவும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக அனைத்து துறையிடமிருந்து தடையின்மை சான்று வரப்பெற்ற பிறகே மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அனுமதி வழங்கப்படும்.
  3. விழா அமைப்பாளர்கள். போட்டியில் பங்குபெற வருகை தந்துள்ள நபர்கள், அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கும் உணவு, குடிநீர் மற்றும் போதிய கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும், காளைகளுக்கு தேவையான தீவனம் (ஒரு காளைக்கு 20 கிலோ என்ற விகிதாச்சாரத்தில்) ஏற்படுத்தி தர வேண்டும்.
  4. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெறும் காளைகளுக்கு முன்னேற்பாடாக 10,000 கிலோ தீவனம் மற்றும் குறைந்தபட்சம் 3 வாட்டர் டேங்க் அளவில் குடிநீர் வசதி தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். 
  5. ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகளை பிடிப்பதற்காக எந்த நேரத்திலும் 25 வீரர்கள் மட்டுமே களத்தில் இருப்பதை காவல் துறையினர் உறுதி செய்ய வேண்டும். மேலும், மாடுபிடி வீரர்களை 25 நபர்கள் வீதம் தொகுதிகளாக பிரித்து போட்டியில் பங்கேற்க அனுமதிப்பதையும் உறுதி செய்ய வேண்டும். மாடு பிடிக்கும் வீரர்கள் அனைவரும் ஊக்கமருந்து உட்கொண்டு உள்ளனரா என்று கண்டிப்பாக (Breath Analyser) கருவி கொண்டு சோதனை மேற்கொள்ள வேண்டும்.
  6. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குகொள்ளும் காளையுடன் உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளரும், காளை மூர்க்கத்தனமாக இருப்பின் ஒரு கூடுதல் உதவியாளர் என அனுமதிக்கப்படுவர்.
  7. மாட்டின் மூக்கனாங்கயிற்றை வாடிவாசலின் உள்ளே அறுப்பதற்கு 20 காளைகளுக்கு ஒரு கத்தி வீதம் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். 
  8. காளைகளின் உடல் தகுதிச் சான்றிதழ் மருத்துவர்களால் காளைகளை பரிசோதனை செய்து எந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுப்பப்படுகிறது. வாகனத்தின் எண், நாள் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்து அனுப்ப வேண்டும்.
  9. காளைகளை வண்டியில் ஏற்றி வரும் போது ஒரு காளைக்கு 2 சதுர மீட்டர் இடவசதி கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும், அவ்வாகனத்தில் ஒருவர் மட்டுமே பயணம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
  10. மருத்துவ பரிசோதனையின் போது காளைகள் சோர்வாகவோ (Fatigue) நீர்ப்போக்குடனோ (Dehydration) அமைதியற்ற நிலையில் (Restlessness) காணப்பட்டால் அவைகளை ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கக்கூடாது. காளைகள் விழா திடலில் நுழையும் முன்பு அவை எவ்வகையிலும் துன்புறுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
  11. காளைகளுக்கு மது அளிக்கப்பட்டுள்ளதை மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டால் அவைகளை ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கக்கூடாது.
  12. ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தில் கண்டிப்பாக விலங்கு அவசர ஊர்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், போதிய எண்ணிக்கையில் கால்நடை மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
  13. விழா அமைப்பாளர்களால் அமைக்கப்பட்ட பார்வையாளர்கள் மேடை மற்றும் இரட்டைதடுப்புகளுடன் வலுவான கட்டமைப்பு அமைக்கப்பட வேண்டும். 
  14. விழா நடைபெறும் இடத்தில் போதுமான மருத்துவ உபகரணங்களுடனும், மருத்துவர்கள் அடங்கிய குழு, அனைத்து முதலுதவி வசதிகளுடன் கூடிய அவசர ஊர்தி முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் இருந்திடல் வேண்டும்.
  15. ஒரு நேரத்தில் ஒரு காளையை ஒரே ஒரு மாடுபிடி வீரர் மட்டுமே பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  16. காளைகளை சேகரிக்கும் பகுதியில் பொதுமக்கள், பார்வையாளர்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், காளையின் உரிமையாளர் அல்லது அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் தவிர மற்ற அனைத்து நபர்களையும் காளை சேகரிப்பு பகுதியில் இருந்து அகற்றப்பட வேண்டும்.
  17. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகில் விழாவில் ஏதேனும் அசம்பாவிதங்கள் சம்பவிக்கும் பட்சத்தில் உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபடும் விதமாக தயார் நிலையில் போதுமான பணியாளர்களுடன் தீயணைப்பு மீட்பு வாகனத்தை நிறுத்தம் செய்திருக்கவேண்டும்.
  18. ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர், முழு நிகழ்விற்கும் தாங்கள் பொறுப்பு என்றும், முழு நிகழ்வும் தேசியமயமாக்கப்பட்ட நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்பதற்கான ஆவணத்தை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
  19. வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்படும் காளைகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் வளாகத்திலிருந்து காளைகள் சேகரிக்கப்படும் பகுதிக்குச் சென்று மீண்டும் திரும்பி வராமல் இருக்க தடுப்பு அரண்கள் அமைக்கப்பட வேண்டும். 
  20. வாடிவாசலின் உள்ளே காளைகளுக்கு காயம் ஏற்படாமல் இருப்பதற்காக கூரிய முனை கொண்ட அமைப்புகள் எவையும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  21. காளைகள் முட்டி மாடுபிடி வீரர்கள் பெருமளவில் காயம்படாமல் தடுக்கும் வண்ணம் காளையின் கொம்பின் நுனியில் ரப்பரிலான குப்பிகள் கண்டிப்பாக பொருத்தப்பட வேண்டும்.


மேற்கண்ட அனைத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் தவறாமல் கடைபிடித்து ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாகவும். பாதுகாப்பாகவும் நடத்தவும் மேலும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியில் எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாத வண்ணம் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி சிறந்த முறையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திட வேண்டும் என விழாக்குழுவினரிடம் இந்திய விலங்குகள் நல வாரிய அமைப்பின் உறுப்பினர் மற்றும் ஜல்லிக் கட்டு கண்காணிப்புக் குழுத்தலைவர் (Nodal Officer) டாக்டர் எஸ்.கே.மிட்டல் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார்.இ.ஆ.ப., ஆகியோர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad